Sunday 7 November, 2010

ஜல் புயலும் மகனின் அமெரிக்க பயணமும்

சந்தானம் என் அக்கா மகன்.புற்று நோய் சம்பந்தமான ஆராய்ச்சியில் டாக்டர் பட்டம் வாங்கியவன்.ராத்திரி பகலாக ஆராய்ச்சி செய்து இப்போதுதான் பட்டம் வாங்கினான்.
அவனுக்கு கல்யாணத்திற்கு தீவிரமாக பெண் பார்த்தோம்.ஒன்றும் சரியாக அமையவில்லை.மேல் ஆராய்ச்சிக்கு அமெரிக்கா செல்ல வேண்டும் என்பது அவனது திட்டம். மனைவியுடன் அனுப்பவேண்டும் என்பது சகோதரியின் விருப்பம்.இந்த காலத்தில் பெண் அமைவது கடினமாக உள்ளது.

அமெரிக்காவிலிருந்து அழைப்பு கடிதம் வந்துவிட்டது.நவம்பர் மாதம் 8 ந்தேதி அதிகாலையில் நான்கு மணிக்கு பிரிட்டிஷ் ஏர்வேஸ்-ல் செல்லவேண்டும்.ஒரு மாதம் முன்பே டிக்கட் அனுப்பிவிட்டது அமெரிகக அலுவலகம்.

நூறு பேருக்குமேல் உள்ள பெரிய குடும்பத்தில் அமெரிக்கா போகும் முதல் ஆள்.நல்ல பெட்டியாக வாங்கு.தேவையான மாத்திரைகள் எடுத்துக்கொள்.சைவ உணவு அதிகம் கிடைக்காது.எல்லாவற்றிலும் மாட்டிறைச்சி இருக்கும்.கேட்டு சாப்பிடு.என்று ஆளாளுக்கு ஆலோசனைகள்.உள்ளூரிலிருந்தும், வெளிநாட்டிலிருக்கும் நண்பர்களிடமிருந்தும் போனில் அழைப்புகள் வந்தவண்ணமிருந்தன.இதில் தீபாவளி வேறு.

எல்லாம் நல்லாத்தான் போய்க்கொண்டிருந்தது.திடீரென்று இந்த 'ஜல்'புயல் பற்றி செய்தி வரும்வரை.கிளம்புவதற்கு நான்கு நாட்களுக்கு முன் மழை கொட்ட ஆரம்பித்துவிட்டது.வழியனுப்ப உறவினர் கள கூட்டம் வீடு நிரம்பி வழிய கல்யாண வீடு மாதிரி ஜே ஜே என்றாகிவிட்டது.காலையிலிருந்து கரண்டை கட் பண்ணி விட்டார்கள்.புயல் கரையை கடந்த பிறகுதான் மின்சாரம் வரும் என்றார்கள். புயல் சென்னைக்கும் நெல்லூருக்கும் இடையே தரையை கடக்கும், என்று வந்த செய்திகள் எல்லாம் வயிற்றை கலக்கின.

பாவம் சந்தானம் சரியாக தூங்கி பத்து நாளாகிவிட்டது.வீட்டிலோ கூட்டம்.படுக்க கூட இடம் இல்லை.புயலால் பயணத்தை தொடரலாமா என்று ஒரே குழப்பம்.அதிகாலை நான்கு மணிக்கு கிளம்பும் விமானத்திற்கு,ஒரு மணிக்கே அங்கு இருக்க வேண்டும்.
மாலை ஆறு மணிக்கு மின்சாரம் வந்தது.மோட்டார் போடாமல் மக்கள் குளிக்காமல்,சாப்பிட்ட பாத்திரங்கள் கழுவாமல் ஒரே இம்சை.மழை தண்ணீர்,கேன் வாட்டர் என்று ஓரளவிற்கு நிலைமையை சமாளித்தோம்.
பன்னிரண்டு மணிக்கு காரில் கிளம்பினோம்.கிண்டியருகே மரம் ரோடின் குறுக்கே கிடந்ததால் நீளமாக வண்டிகள் நின்றுகொண்டிருந்தன.வேளச்சேரி ஆதம்பாக்கம் நங்கநல்லூர் என்று சுற்றி ஒரு வழியாக ஏர்போர்ட்டுக்கு வந்து சேர்ந்தோம்.

இன்று பிளைட் இருக்குமா இருக்காதா, தாமதமாகுமா என்றெல்லாம் கவலையுடன் வந்த எங்களுக்கு பிரிட்டிஷ் விமானத்தை பார்த்ததும் நிம்மதியாயிற்று. சரியான நேரத்திற்கு விமானம் கிளம்பிச்சென்றது."வெள்ளைக்காரன், வெள்ளைக்காரன்தான் என்றார் ஒரு பெரியவர்."ஜல்"புயல் பலவீனமடைந்து வருகிறது என்றது டி.வி.செய்தி.இத்தனை கலாட்டாவில் பலவீனம் ஆனது நாங்கதான்.

No comments: