சாரு நிவேதிதா ஒரு இளம்பெண்ணிடம் நடத்திய முகநூல் உரையாடல்கள் இன்றைக்கு மிகவும் பரபரப்பான விஷயங்களில் ஒன்றாகியிருக்கின்றன. நீரா ராடியா, விக்கிலீக்ஸ் முதலிய டேப்கள் எவ்வளவு பரபரப்பாகப் பேசப்பட்டனவோ அதைவிடவும் பரபரப்பான விஷயமாக இந்த சாட் பேச்சுக்கள் தமிழ் இணையதளங்களில் இன்றைக்கு முக்கிய இடத்தைப் பிடித்திருக்கின்றன. நீரா ராடியா மற்றும் விக்கிலீக்ஸ் விவகாரங்களைப் படிக்கிறவர்களுக்கு வெறும் அதிர்ச்சி மட்டுமே பிரதானமாக இருந்தது. இந்த ஆபாச உரையாடல்களில் அதிர்ச்சியுடன் குற்றமனப்பான்மையும் சேர்ந்துகொண்டு வதைப்பதுதான் முக்கியம். இதில் ஈடுபட்டவர்களுக்கு இத்தகைய குற்றமனப்பான்மை ஏற்பட்டதோ இல்லையோ படிக்கிற நமக்கு ஏற்படுகிறது. காரணம் இதில் சம்பந்தப்பட்டிருக்கும் இருவரில் ஒருவர் நம்முடைய வீடுகளில் இருக்கநேரும் இளம்பெண்களில் ஒருவர். மற்றவர் சமுதாயத்தில் மதிக்கப்படும் இடத்தில் வைக்கப்படவேண்டிய எழுத்தாளர்களில் ஒருவர்.
இது புறக்கணிக்கப்படவேண்டிய விஷயமா அல்லது விவாதிக்கபடவேண்டிய விஷயமா என்பதிலேயே நிறைய கருத்துமோதல்கள் இருக்கின்றன. நாட்டில் எத்தனையோ விஷயங்கள் இருக்கும்போது இந்த அருவெறுப்பான விஷயத்திற்கு ஏன் முக்கியத்துவம் வழங்கப்படவேண்டும் என்பது ஒரு சாராரின் வாதம். ஆனால் இன்றைக்கு இணையத்தில் நடைபெறும் இம்மாதிரியான வாதங்கள் தமிழுலகம் இதுவரையிலும் காணாத ஒன்று. இப்படிப்பட்ட விவாதங்கள் பொதுவெளியில் நடப்பதற்கு வாய்ப்பில்லை. எந்தப் பத்திரிகைகளும் இம்மாதிரியான விவாதக்களங்களை ஏற்படுத்தப்போவதில்லை. அப்படியே ஏற்படுத்தினாலும் இவற்றில் வருகிறமாதிரியான சொல்லாடல்கள் நிச்சயம் பத்திரிகைகளில் சாத்தியமில்லை. அதிலும் இணையத்தில் புழங்கும் அளவு கெட்டவார்த்தைகளுக்கு இடமில்லை.இணையத்தில் யாரும் யாருக்கும் தடைவிதிக்க முடியாது. யாரும் யாரையும் கட்டுப்படுத்த முடியாது என்பது எதற்கான சுதந்திரம் என்பதே புரிபடாத அளவுக்கு இணையம் உபயோகிப்பவர்கள் தங்கள் பாட்டுக்கு புகுந்துவிளையாடுகிறார்கள். எத்தனை ஆபாசமான வக்கிரமான சொற்கள் இருக்கின்றனவோ அத்தனையையும் உபயோகித்து சமர் புரிகிறார்கள்.
எதற்குத் தெரியுமா? ஒன்றுமில்லாத விஷயத்திற்கு!
சாரு நிவேதிதா என்ற எழுத்தாளரிடம் பேஸ்புக் தொடர்பில் சாட் செய்வதற்கு ஒரு பெண் முயற்சி செய்கிறார். இத்தனைக்கும் அந்தப்பெண் சாருநிவேதிதா எழுதிய எந்த ஒரு நூலையும் படித்தவரில்லை. ஆக, ஒரு வாசகியாகவோ ஒரு ரசிகையாகவோ அந்தப்பெண் சாருவை அணுகவில்லை. வெறும் முகநூலில் தொடர்புகொண்டு இன்றைக்குத் தம் காலத்தையும் வாழ்வையும் தொலைத்துக்கொண்டிருக்கும் எத்தனையோ ஆயிரக்கணக்கான பேர்களில் ஒருத்தியாகத்தான் அந்தப்பெண்ணும் சாருவை அணுகுகிறார். அப்படி தாம்அணுகுபவர் ஒரு புகழ்பெற்ற எழுத்தாளராகவும் இருப்பதில் அந்தப்பெண்ணுக்கு ஒரு பெருமை அவ்வளவுதான்.
இங்கே இதனைத் தவறென்றுகூடச் சொல்லமுடியவில்லை. ஏனெனில் இன்றைக்கு தமிழின் புகழ்பெற்ற எழுத்தாளர் யார் என்ற கேள்விக்கு யாரிடமும் பதில் இல்லை. அகிலன் ஜெயகாந்தன் நாபா முவ திஜா இவர்கள் காலத்திற்குப்பின்பு சுஜாதாதான் மிகவும் புகழ்பெற்ற எழுத்தாளராக இருந்தார். அவருக்குப்பின் யாருக்கும் அந்த இடம் வாய்க்கவில்லை.
ஏனெனில் புகழ்பெற்ற வெகுஜனப்பத்திரிகைகளுக்கு இன்றைக்கு ‘படைப்பு எழுத்தாளர்கள்’ என்ற ஒரு இனமே தேவையில்லாமல் போய்விட்டது.
பேருக்குச் சில சிறுகதைகளை எப்போதாவது வெளியிடுகிறார்களே தவிர, படைப்பிலக்கியத்துக்கான எந்த ஒரு சிரத்தையையும் வெகுஜன இதழ்கள் காட்டுவதில்லை. குழந்தை இல்லாத வீட்டிலே கிழவன் துள்ளிவிளையாடினானாம் என்பதுமாதிரி இடையில் புகுந்தன சிற்றிதழ்கள் என்ற வரிசையில் சில இதழ்கள். இவற்றில் காலச்சுவடும் உயிர்மையும் முன்னணியில் இருக்கின்றன. சந்தடி சாக்கில் கடையை விரித்த இந்த இதழ்கள் கருத்துருவாக்கத்தில் அதகளம் பண்ண ஆரம்பித்தன.
காலச்சுவட்டைப் பொறுத்தவரை தமிழில் எழுத்தாளர் என்றாலேயே இரண்டுபேர்தாம்.
கவிஞர் என்றாலும் இரண்டுபேர். ஒருவர் பாரதியார், இன்னொருவர் பசுவய்யா.
அதாவது சுந்தர ராமசாமி. எழுதாளர்கள் என்றால் இரண்டுபேர். அதாவது, போனால் போகிறதென்று புதுமைப்பித்தன். அவருக்குப்பிறகு தமிழில் தோன்றிய ஒரே எழுத்தாளர் சுந்தர ராமசாமி. சுந்தர ராமசாமி மட்டும்தான் தமிழுக்கு இலக்கிய அந்தஸ்து தேடித்தந்தவர். தமிழில் சிறுகதைகள் எழுத வழிவகுத்தவர். தமிழில் ‘முதல் நாவல்’ எழுதியவர். தமிழில் கட்டுரைகள் எழுதுவது எப்படி என்று சொல்லித்தந்தவர். அவருடைய சிஷ்யப்பரம்பரை ஒன்றை உருவாக்கி தமிழுக்கு விட்டுச்சென்றிருப்பவர்............இதுதான் காலச்சுவடு கட்டமைத்துகொண்டிருக்கிற பிம்பம்.
அதற்கடுத்து உயிர்மை..... உயிர்மையின் ஆசிரியர் மனுஷ்ய புத்திரன் காலச்சுவட்டிலிருந்து வெளியில் வந்தவர். உண்மையில் தமிழின் முக்கியமான கவிஞர்களில் ஒருவர். இவர் கட்டமைத்திருக்கும் எழுத்தாளர்களில் சாருநிவேதிதா, ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன் ஆகியோர் உண்டு. மற்ற இருவரையும்விட சாருநிவேதிதாவை விளம்பரத்திற்காகவும் வியாபார உத்திக்காகவும் இவர் பயன்படுத்துவதும் உயிர்மையை சாருநிவேதிதா பயன்படுத்துவதும் என இரண்டுமே மாறிமாறி நடைபெறும் நிகழ்வுகளாக அமைந்திருக்கின்றன.
இவர்களில் எஸ்.ராமகிருஷ்ணனைத் தவிர்த்து ஜெயமோகனும் சாருநிவேதிதாவும் இணையத்தையும் இளைஞர்களையும் மிகச்சரியாகப்புரிந்துவைத்துக்கொண்டு செயல்படுபவர்கள் எனலாம். இணைய வீச்சு எத்தகையது, அதன் வாசகத்தளம் எத்தகையது அவர்களுக்கு என்னமாதிரியான stuff ஐ வழங்கினால் எடுபடும், தம்முடைய எழுத்துவியாபாரம் பிரமாதமாக நடக்கும் என்பதையெல்லாம் கணக்குப்போட்டு இணையத்தை வளைத்துப்போட்ட புத்திசாலிகள்.
சென்ற தலைமுறை வாசகத்தளம் என்பது, எது படிக்கக் கிடைக்கிறதோ அதனை ஏற்றுக்கொண்டு, அதற்கு முந்தைய தலைமுறை எழுத்து எப்படி இருந்தது அதற்கும் முந்தைய தலைமுறை எப்படி இருந்தது என்றெல்லாம் தேடிப்போகும் தேடல் கொண்டிருந்தது. அதனால்தான் கிடைத்ததைப் படித்ததோடு நின்றுவிடாமல் பைண்ட் செய்து வைக்கப்பட்ட பழைய இதழ்களையெல்லாம் தேடிப்பிடித்துப் படிக்கும்போக்கு இருந்தது. இன்றைய இளைஞர்களுக்கு அதெல்லாம் குப்பை. இவர்களுக்கு எல்லாமே நெட்டில் வேண்டும். தினசரி செய்தியும் சரி விமர்சனமும் சரி படைப்பாக்கங்களும் சரி எல்லாம் நெட்தான். நெட்டிலே பிறந்து, நெட்டிலே வளர்ந்து, நெட்டிலேயே முடிந்துபோகும் பரிதாபநிலைக்கு வந்துவிட்டது இன்றைய இளையதலைமுறை.
இந்தவகையில் இன்றைக்குப் ‘படுபிரபலமாக இருக்கும்’ முன்னணி எழுத்தாளர் சாருநிவேதிதா பற்றிய சர்ச்சை இது. ஒரு சாதாரணப்பெண்ணிடம் இன்றைக்குத் தமிழின் பிரபல எழுத்தாளர் என்று சொல்லப்படும் ஒருவர்- அல்லது சொல்லிக்கொள்ளும் ஒருவர்- அதாவது அவர் தம்முடைய பெருமை இந்தத் தமிழ்நாட்டிற்கு இன்னமும் தெரியவில்லை என்கிறார். தமக்குக் கிடைக்கவேண்டிய மரியாதையும் விருதுகளும் அங்கீகாரங்களும் இன்னமும் தரப்படவில்லை என்கிறார். தமிழுக்கு நோபல் பரிசு பெற்றுத்தரக்கூடிய ஒரே எழுத்தாளர் தாம்தான் என்றும் சொல்லிக்கொள்கிறார்- அப்படிப்பட்ட ஒருவர் எப்படி நடந்துகொண்டிருக்கிறார் என்பதற்கான சம்பவமே இது. என்ன நடந்திருக்கிறது என்பதும் அவர் எப்படியெல்லாம் அந்தப் பெண்ணிடம் உரையாடியிருக்கிறார் என்பதையும் வினவு தளம் விரிவாகவே வெளியிட்டிருக்கிறது.
இந்த விவகாரத்தை முதலில் தமிழச்சி வெளிப்படுத்துகிறார். பின்னர் ராஜன் தம் பதிவில் எழுதுகிறார். அதனைத்தொடர்ந்து சர்ச்சைகள் உருவாகின்றன. கடுமையான கண்டனங்களுடன் சாருவை எதிர்ப்பவர்களும், இது அவருடைய இமேஜைக் குலைக்க நடைபெறும் சதி என்பதான எதிர்வினைகளும் வரிசைக்கட்டுகின்றன. இது ஏதோ சதி, மர்மம் என்பதுபோன்ற பாவனைகளுடன் பல்வேறு பதிவுகளும் கருத்துரைகளும் வருகின்றன. அந்தப்பெண் முதலில் ஒரு பெண்ணே அல்ல; அவர் ஒரு ஆண்...வேண்டுமென்றே சாருவை மாட்டிவைப்பதற்காகச் செய்யப்பட்ட சதி என்று சீறலுடன் கருத்திடுகிறார்கள் சிலர். ‘அந்தப்பெண் வேறுயாருமல்ல; பாரீஸிலிருக்கும் தமிழச்சிதான் வேறொரு பெயரில் இப்படியெல்லாம் பேசி சாருவை வம்பில் மாட்டிவைத்திருக்கிறார். ஹிட்ஸுக்காக இப்படிச் செய்யக்கூடியவர்தான் அந்தத் தமிழச்சி’ என்று பேசுகிறார்கள் சிலர்.
‘இல்லை அந்தப்பெண் எனக்குத்தெரிந்தவர்தான். நான் நடத்திய பதிவர் சந்திப்பிற்குக்கூட தமது தாயாருடன் வந்து கலந்துகொண்டவர். அவருடைய தாய்மொழிகூடத் தமிழ்அல்ல; தெலுங்கு’ என்று விவரம் தெரிவிக்கிறார் பிரபல பதிவர்களில் ஒருவரான வால்பையன்.
அப்போதும் சர்ச்சைகள் அடங்காதுபோகவே “இல்லை இல்லை அந்தப்பெண் ஏற்கெனவே என்னிடம் சிகிச்சைக்கு அனுப்பிவைக்கப்பட்டவர். நான்தான் இதனை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ளாமல் வாளாவிருந்துவிட்டேன்” என்று மனநல மருத்துவர் ஐயாருத்ரன் அவர்கள் தெளிவுபடுத்தவேண்டிவந்தது.
அதற்குப்பின்னரும் வேறு வகையில் சர்ச்சைகளைத் தொடர்ந்தனர் சாருவை ஆதரித்தவர்கள். அவர்களுடைய வாதமெல்லாம் ஒன்றை நோக்கியே இருந்தது. அதாவது சாரு எப்படிப்பட்டவர் என்பதுதான் எல்லாருக்கும் தெரியுமே, அவர் கொஞ்சம் ஆபாசமாகப் பேச ஆரம்பித்ததுமே தொடர்பைத்துண்டித்துவிட்டு இந்தப்பெண் வேறு வேலையைப் பார்க்கப் போகவேண்டியதுதானே, தொடர்ச்சியாக ஏன் அவரிடம் பேசவேண்டும்? தப்பு இந்தப்பெண்ணிடமும் இருக்கிறது என்று ஒருசிலரும், இல்லைஇல்லை தப்பு இந்தப் பெண்ணிடம் மட்டும்தான் இருக்கிறது என்று சிலருமாக கச்சை கட்ட ஆரம்பித்தார்கள். வாதங்களில் பெண்ணாதிக்கம் ஆணாதிக்கம் என்ற வார்த்தைகளெல்லாம்கூடப் புழங்க ஆரம்பித்தன. அந்தப்பெண் மீது குற்றம் சுமத்தின யாருமே சாரு போன்ற ஒரு பிரபல தமிழ் எழுத்தாளர் இவ்வளவு தரம் தாழ்ந்து பேசலாமா என்பதுபற்றிக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை.
சாருநிவேதிதாவின் உரையாடல்களைப் படிக்கும்போது மனப்பிறழ்ச்சி கொண்ட காமாந்தகன் ஒருவன் பிதற்றிய பிதற்றல்களாகவே கொள்ளவேண்டியிருக்கிறது. நாகரிக வரம்புகள் எதற்குமே அவர் உட்பட்டவராகத் தெரியவில்லை. சாதாரணமாக ஒரு காரிலோ அல்லது சைக்கிளிலோ செல்ல வேண்டிவந்தால்கூட சாலைகளில் நாம் இஷ்டத்துக்கு ஓட்டிக்கொண்டு போகமுடியாது. சில கட்டுப்பாடுகளுக்கும் வரம்புகளுக்கும் உட்பட்டாக வேண்டும். உடனே, காற்றுக்கென்ன வேலி கடலுக்கென்ன மூடி? எழுத்தாளனுக்குப்போய் கட்டுப்பாடா? வரம்புகளா? என்ற வாதங்களையெல்லாம் இங்கே கொண்டுவரக்கூடாது. ஒரு எழுத்தாளன் என்றால் அவனுக்கு சமுதாயத்தில் ஒரு கவுரவம் இருக்கிறது. அவனுக்கென்று சில கட்டுப்பாடுகளும் நிர்ப்பந்தங்களும் சில வரையறைகளும் உள்ளன. ஒரு சாதாரணக் குடிமகனைவிட, ஒரு சாதாரண வாசகனைவிட ஒரு எழுத்தாளன் பொறுப்புணர்வோடும், கவுரவத்தோடும் மரியாதையோடும் செயல்படவேண்டும் என்று எதிர்பார்க்கும் சமூகம் இது. அவற்றில் எதையுமே கருத்தில்கொள்ளாமல் எப்படி வேண்டுமானாலும் நான் நடந்துகொள்வேன் என்று யாரும் நடந்துகொள்ள முற்பட்டால் சாரு படுவதுபோன்ற அவமானங்களைப் பட்டுத்தான் ஆகவேண்டும்.
சாருவைக் கட்டிக்காப்பாற்ற வேண்டும் என்பதற்காக ஒருசில அன்பர்கள் எடுத்துக்கொண்ட முயற்சிகளும் அவர்கள் எடுத்துவைத்த வாதங்களும் சாருவின் செயல்களைவிட மோசமானதாக இருந்தன. ராஜனின் தளத்தில் சிம்மக்கல் என்ற ஒருவர் படு காத்திரத்துடன் உரையாற்றிக்கொண்டிருந்தார். மாறிமாறி சொன்னதையே சொல்லிக்கொண்டிருந்தார். வினவு தளத்திலும் ஜோஅமலன் என்ற ஒருவர் அங்கே சிம்மக்கல் சொன்னதையே இங்கே தம் பங்குக்குச் சொல்லிக்கொண்டிருந்தார். அல்லது இரண்டுபேருமே ஒருவராகவேகூட இருக்கக்கூடும்.
சாருவை நீங்கள் எப்படிக் குறை சொல்லலாம்? யாரும் செய்யாததையா சாரு செய்துவிட்டார்? எம்ஜிஆர் ஜானகி அம்மாளை கணபதிபட்டிடமிருந்து பிரித்து கூட்டிவைத்துக் கொள்ளவில்லையா? சிவாஜி தேவிகாவுடன் என்ன செய்தார்? ஜெமினிகணேசன் புஷ்பவல்லியை வைத்துக்கொள்ளவில்லையா, அதற்குப்பின்னும் வேறொரு பெண்ணை வைத்துக் கொள்ளவில்லையா? கருணாநிதியின் கதை என்ன, எம்ஆர்ராதா ராதிகாவின் அம்மாவை எப்படி வைத்துக்கொண்டார்.....ஆகவே கலைஞர்கள் எல்லாரும் அயோக்கியர்களே..இதில் சாருவை மாத்திரம் எப்படிக்குறை சொல்லலாம்? என்ற பாணியில் இவர் பாட்டுக்கு தமிழகத்தின் அத்தனைப் பிரபலங்களையும் இழுத்துவைத்து சகட்டுமேனிக்கு அசிங்கப்படுத்திக்கொண்டு இருந்தார்.
இந்த அன்பருடைய பிரதான கோபம் கண்ணதாசன்மீது. கண்ணதாசன் கடைசிக்காலத்தில் ரசிகையாய் வந்த கல்லூரி மாணவியைக் கூத்தியாராக வைத்துக்கொள்ளவில்லையா? பாரதி என்ன நார்மலாக நடந்துகொண்ட மனிதனா அவனை ஏன் கொண்டாடுகிறீர்கள்? சாருவை ஏன் கேள்வி கேட்கிறீர்கள் என்பது அவர் கேள்வியாக இருந்தது. கூடவே பெண்கள் விஷயத்தில் மற்ற பிரபலங்கள் எல்லாரும் எப்படிவேண்டுமானாலும் இருக்கலாம் அவர்களையெல்லாம் கொண்டாடுவீர்கள்; கேள்விகேட்க மாட்டீர்கள். காரணம், தமிழர்கள் ஹீரோ ஒர்ஷிப் ஆசாமிகள். பாரதி, கண்ணதாசன் என்று எல்லா எழுத்தாளர்களையும் தெய்வமாக்கிவிடுகிறீர்கள் என்று குறைபாடியிருந்தார் அவர்.
நல்லவேளை இந்த மனிதரிடம் திருவிக, ராயசொ, முவ, ஆறுமுக நாவலர் கவிமணி, நாமக்கல் கவிஞர் இவர்களெல்லாம் சிக்கவில்லை. இன்னமும் ரோமன் போலன்ஸ்கி, பில்கிளிண்டன்-மோனிகா லெவின்ஸ்கி, கென்னடி-மர்லின்மன்றோ என்ற சில பெயர்களும் நினைவுக்குவரவில்லை போலிருக்கிறது. அதிலும் பெரிய தமாஷ் என்னவென்றால் இவர்கூறுவதைக் கேட்கவோ ஆமோதிக்கவோ உடன்சேர்ந்துகொள்ளவோ யாரும் ஆள் இல்லை என்றபோதும் சொன்ன ஒரே வாதத்தை, அதுவும் ஒரேவகையான வாதத்தை மீண்டும் மீண்டும் பிடிவாதமாகச் சொல்லிக்கொண்டிருந்தார். தாம் எடுத்த வாந்தியை தாமே வழித்துத் தின்றுவிட்டு மறுபடியும் மறுபடியும் அதே வாந்தியை எடுத்துக்கொண்டிருந்தது போன்ற பரிதாபத்தையே தோற்றுவித்தது அவரது வாதங்கள்.
ஹீரோ ஒர்ஷிப் என்பது எப்படி வருகிறது? சராசரி மனிதனால் செய்யமுடியாததை அது அறிவோ கலையோ விளையாட்டோ படிப்போ எவனொருவன் செய்கிறானோ அவனை வியந்து பாராட்டுவது இயற்கைப் பண்பு. அந்த செயற்பாடு ஒரே சமயத்துடனோ அல்லது ஒரேயொரு வித்தையுடனோ முடிந்துபோய்விட்டால் சின்ன ஆச்சரியத்துடன் அவனைக் கடந்துவிடும் மனிதசமுதாயம் அதே காரியத்தை அவன் தொடர்ந்தாற்போல்- அதுவும் மக்களுக்குப் பிடித்தவகையில் தொடர்ச்சியாக செய்துகொண்டிருக்கும்போது- வியப்பு ஈர்ப்பாக மாறிப்போய் அவனைக் கொண்டாடவும் ஆரம்பித்துவிடுகிறான். வியப்பாக இருந்தது ஈர்ப்பாக மாறி ஈர்ப்பு பிரியமாகவும் வடிவெடுத்துவிடுகிறது. கலைஞர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், விளையாட்டுவீரர்கள், நடிகர்கள் இவர்களுக்கெல்லாம் மக்கள் மத்தியில் ஏற்படுகின்ற ஹீரோ ஒர்ஷிப் என்பது இந்த வகையினதுதான். இவற்றில் சில போலிகளும் உள்ளன என்பது வேறுவிஷயம்.
இப்படி மக்களின் வியப்பிற்கு உரியவராக மாறிய ஒருவரை நான் வியப்பாகப் பார்ப்பதற்கில்லை, எனக்கு அவர்களெல்லாம் சாதாரணம் ஏனெனில் நான் மேதாவி- என்று எவனொருவன் சொல்கிறானோ அவனிடம் சாதாரணமாக எல்லா மனிதர்களிடமும் இருக்கவேண்டியவற்றுள் ஏதோ ஒன்று குறைந்திருக்கிறது என்று பொருள். அவனுக்காக நாம் பரிதாபப்படலாமே தவிர அவன் கருத்துக்களை சிலாகிப்பதற்கில்லை.
பிரபலங்களிடம் அதுவும் திரைப்படத்துறையைச் சேர்ந்த பிரபலங்களிடம் பெண்கள் தாங்களாகவே போய்விழுவதென்பது எம்கேடி காலத்திலிருந்து நடைபெற்றுவரும் ஒன்றுதான். திரைப்படத்துறையில் யார்யாருக்கு யார்யாருடன் தொடர்பு இருக்கிறது என்பதெல்லாம் எப்போதுமே பத்திரிகைகளில் அடிபடுகின்ற மக்களுக்கும் தெரிந்த ரகசியங்கள்தாம். திரைப்படத்துறை அப்படித்தான் இருக்கும் என்பதை மக்களே ஏற்றுக்கொண்டுதான் அவர்களுக்கு ஆதரவும் தெரிவிக்கிறார்கள்.
ஆனால் மக்கள் மதிக்கும் வேறுசில துறைகளில் உள்ள பிரபலங்கள் இப்படிப் பாலியல் குற்றங்களைச் செய்கிறார்கள் எனும்போது மக்கள் அதனை அவ்வளவு எளிதாக ஏற்றுக்கொள்வதில்லை. மனைவியைத் தவிர இன்னொருவருடன் தொடர்பு என்பதை ஒருவாறாக ஏற்றுக்கொண்டாலும் எல்லாவற்றுக்கும் ஒரு வரம்பு இருக்கிறது. அவர்கள் சமூகத்தின் முன் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தது அது.
இன்னொரு பெண் தொடர்பு என்பது எத்தனையோ பிரபலங்களின் வாழ்க்கையில் இருப்பதுதான். அதனைப் பெரும்பாலோர் ஒரு நாகரிக வரம்புக்கு உட்பட்டு அந்தரங்கம் என்ற அளவில் காப்பாற்றிக்கொள்கிறார்கள். இந்த நண்பர் சொன்ன பலரும்கூட இந்தவகையான அந்தரங்கத்தைக் கடைப்பிடித்தவர்களே. அதனால் அவையெல்லாம் ஒரு ரகசியக்கிசுகிசு என்ற அளவுக்குத்தான் ஒரு ரசிகனை அடைந்த விஷயங்கள். இம்மாதிரியான விஷயத்தைத்தொட்டு ஜெயகாந்தன் ஒரு அருமையான சிறுகதை எழுதியிருக்கிறார். ‘அந்தரங்கம் புனிதமானது’ என்பது கதையின் பெயர். சம்பந்தப்பட்ட நண்பர்கள் அதனை ஒருமுறை படித்துப்பார்ப்பது நல்லது.
மனைவியைத்தவிர வேறொரு பெண்ணுடன் சாருவுக்குத் தொடர்பு இருக்கிறது என்றுமட்டும் ஒரு செய்தி இங்கே பரவியிருந்தால் யாரும் அதுபற்றிக் கவலைப்பட்டிருக்கப்போவதில்லை. சாரு இன்னொரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார் என்று வந்திருந்தால் யாரும் அதுபற்றி விவாதம் செய்தோ பதிவு எழுதியோ தங்கள் கோபத்தைக் காட்டியிருக்கப்போவதில்லை. இது அப்படிப்பட்ட விஷயம் அல்ல; சாட் செய்யவந்த ஒரு பெண்ணிடம் எவ்வளவு அசிங்கமாய் எவ்வளவு கேவலமாய் எவ்வளவு ஈனத்தனமாய் ஒரு தமிழ் எழுத்தாளர் நடந்துகொண்டிருக்கிறார் என்பதுதான் இங்கே விஷயம். அதுவும் அந்த மனிதர் பயன்படுத்தியிருக்கும் வார்த்தைகளும் அவரது நோக்கங்களும்...................
ஒருவனுடைய சுதந்திரம் எந்த அளவுக்கு என்பதுபற்றி ஆங்கிலத்தில் சொல்வார்களே, நீ உன்னுடைய கையில் இருக்கும் தடியை எப்படிவேண்டுமானாலும் சுழற்றலாம் ஆனால் அது அடுத்தவன் மூக்கில் படாமல் இருக்கவேண்டும் என்று. மூக்கை அல்ல முகரையையே பேர்க்கின்ற காரியத்தை சாரு செய்யும்போது கண்டுக்காமல் போகவேண்டும் என்பதும் குப்பன் செய்யவில்லையா குட்டையன் செய்யவில்லையா என்று கேட்பதும் என்ன நியாயம்?
சரி..சாருவுக்காக வாதாட வருகிறார்களே அவர்கள், ‘நானே அப்படித்தான். அப்படியிருக்க சாருநிவேதிதா ஏன் அப்படியிருக்கக்கூடாது?’ என்று தங்கள் வாதத்தை வைத்திருந்தாலாவது பரவாயில்லை. பாரதியார் யோக்கியமா, சிவாஜிகணேசன் யோக்கியமா, எம்ஜிஆர் யோக்கியமா,எம்ஆர்ராதா யோக்கியமா,கண்ணதாசன் யோக்கியமா என்று கேட்பதைத்தான் சகித்துக்கொள்ள முடியவில்லை.
அதிலும் குறிப்பாக கண்ணதாசனைத்தான் சுழற்றிச் சுழற்றிச் சாடுகிறார் இந்த அன்பர். வள்ளியம்மையுடனான அவரது திருமணம் ஓரளவு எல்லோருக்கும் தெரிந்தேதான் நடைபெற்றது. அதுபற்றிய புகைப்படத்துடனான கட்டுரைகள் அப்போதே குமுதம் முதல் பல பத்திரிகைகளிலும் வெளிவந்தன. காமராஜர் கண்டித்தார் என்பதுபோல்கூட ஒரு செய்தியைப் படித்ததாக நினைவு. வேறுமாதிரியான சமூக நிர்ப்பந்தங்களும் தார்மிக நெறிமுறைகளும் ஒருபுறம் இருக்க அந்தப் பெண்மணியும் கண்ணதாசனும் இசைந்தே இந்த ஒப்பந்தம் நடைபெற்றது என்பதில் சந்தேகமில்லை. கண்ணதாசனைப் பற்றி மிகக் கேவலமான கேள்விகளை முன்வைக்கும் அந்த நபர் ‘அவனுக்கு மட்டும் மவுண்ட் ரோட்டில் வெண்கலச்சிலை வைத்துக் கொண்டாடுகிறீர்களே ஏன்?’ என்ற கேள்வியை நான்கைந்துமுறை கேட்கிறார்.
ரொம்ப நல்லது. அந்த மகாகவிஞனுக்கு இந்த நண்பரின் வாய்முகூர்த்தப்படி மவுண்ட் ரோட்டிலும் ஒரு சிலை வைத்துவிட்டால் நன்றாகத்தான் இருக்கும். எனக்குத் தெரிந்து கவிஞருக்கு மவுண்ட் ரோட்டில் சிலை இல்லை. சென்னை தியாகராய நகரில் ஜி.என்.செட்டித்தெருவில்தான் வாணிமகாலுக்கு அருகில் கவிஞரின் சிலை உள்ளது. இன்னொரு சிலை காரைக்குடியில் கண்ணதாசன் மணிமண்டபத்து வாசலில் உள்ளது. அதுதவிர மேலும் சிலைகள் ஜெயலலிதா ஆட்சியில் வைத்தால்தான் உண்டு. ஏனெனில் கலைஞர் அவருக்கு சிலையோ அல்லது வேறு எந்தச் சிறப்புக்களுமோ செய்யமாட்டார். சரி விஷயத்துக்கு வருவோம்.
இந்த ஒரு பிரச்சினையை வைத்துக்கொண்டு கண்ணதாசனைப் படுகேவலமாக விமர்சிக்கும் அந்த நண்பருக்கு கவிஞர் என்பதற்கு அப்பாற்பட்டு கண்ணதாசன் எத்தனை அற்புதமான மனிதர் என்பது தெரியுமா? மற்றவர்களுக்கு உதவுவதிலும் பழகுவதிலும் எந்தளவு மனிதாபிமானம் கொண்டவர் என்பது தெரியுமா? எத்தனை மனித நேயம் கொண்டவராக எவ்வளவுபேருக்கு உதவியிருக்கிறார் என்பது தெரியுமா? அவரது நல்ல சுபாவத்தைப் பயன்படுத்திக்கொண்டு எத்தனைப்பேர் அவரை ஏமாற்றியிருக்கிறார்கள் என்பது தெரியுமா? இது ஒரு பக்கம்- மறுபுறம் அவரது துறையை எடுத்துக்கொண்டால் அவர் ஈடுபட்டிருந்த துறையில் எத்தனை விற்பன்னர் தெரியுமா அவர்? எவ்வளவு வேகத்துடன் இலக்கியநயம் சார்ந்த வார்த்தைகள் வந்துவிழும் தெரியுமா அவருக்கு? மெட்டுக்கான பாடலாகட்டும், கவிதைகளாகட்டும் நயாகரா அருவியைப்போல் கொட்டும் மகத்துவம்பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறாரா அவர்? தம்முடைய மூன்றாவது திருமணம் பற்றி “இப்படி நடந்திருக்கக்கூடாது. ஆனால் விதிவசத்தால் நடந்துவிட்டது. என்னுடைய சில பலவீனங்களே இதற்குக் காரணம்” என்று கருத்துத் தெரிவித்திருந்த கவிஞர், அந்த அம்மையாரை எப்படியெல்லாம் வைத்துப் பாராட்டினார் சீராட்டினார் என்பது தெரியுமா? அவருக்கு எந்தக் காலத்திலும் பொருளாதாரச்சிக்கல் வந்துவிடக்கூடாது என்பதற்காக வானதி திருநாவுக்கரசு மூலமாக என்னவிதமான ஏற்பாடுகளைச் செய்திருந்தார் என்பது தெரியுமா?
இந்தத் ‘தமிழ்ப்பொண்ணு’ விவகாரத்தில்(தெலுங்குப்பொண்ணு என்று சொல்லவேண்டுமா வால்பையன்?) சாருநிவேதிதா இப்படித்தான் நடந்துகொண்டாரா, அல்லது நடந்துகொள்ளத் தயாரா? இந்தப் பெண் சம்மதித்தால் கண்ணதாசனைப்போல் திருமணம் செய்துகொள்வாரா இந்தப் பின்நவீனத்துவம்? அறுபதுகளிலிருந்தே இன்றைக்குவரை ஆயிரக்கணக்கிலும் லட்சக்கணக்கிலும் நூல்கள் விற்றுத்தீர்ந்து போயிருக்கும் கண்ணதாசன் எங்கே, ஒரு வருடத்திற்கு எண்பது பிரதிதான் விற்றிருக்கிறது என்று புலம்பும் சாரு எங்கே? ஒப்பீடு செய்வதற்குக் கொஞ்சமாவது சமச்சீர் வேண்டாமா? வார்டு கவுன்சிலருடன் பிரதமரையை ஒப்பிட்டுப்பேசுவது?
போகட்டும்....கண்ணதாசனோ அந்த நண்பர் குறிப்பிட்டிருக்கும் மற்றவர்களோ பெண்பித்தர்கள் இல்லையா அவர்களை ஏன் கொண்டாடவேண்டும்? என்பது வெளிப்படையாகப் பார்க்கும்போது நியாயமான கேள்விதான். இந்த அளவுகோலை மட்டும் வைத்துக்கொண்டால் எந்தத் துறையிலும் எந்தப் பிரபலமும் தேறமாட்டார்கள். நாம் பாட்டுக்கு வறட்டுத்தனமான கேள்விகளைக் கேட்டுக்கொண்டு மோட்டுவளையைப் பார்த்துப் பாயைப் பிறாண்டிக்கொண்டு உட்கார்ந்திருக்கவேண்டியதுதான். அப்புறம் என்னதான் தீர்வு? புத்திசாலிகளுக்கு வள்ளுவன் வழி சொல்லுகிறான்.
ஒருவன் பற்றிய நல்ல தன்மைகளை-குணங்கள் மற்றும் திறமைகளை- ஒரு பக்கம் வை; அவனுடைய தீய தன்மைகளை- தீய குணங்கள் மற்றும் பலவீனங்களை- இன்னொரு பக்கம் வை. எது அதிகமாக இருக்கிறதென்று பார். எது அதிகமோ அதுதான் அவன் என்று தீர்மானித்துக்கொள் என்பதுதான் வள்ளுவர் காட்டும் வழி.
குறள் இதுதான் – ‘குணம்நாடிக் குற்றமும் நாடி அவற்றுள், மிகைநாடி மிக்க கொளல்’ இந்த பார்முலாவை வைத்துக்கொண்டு நாம் யாரை வேண்டுமானாலும் மிகச்சரியாகவே எடைபோட்டுவிட முடியும். இப்படிப் போடப்படும் எடையில் கவிஞரின் பலவீனங்கள் சிறிதுதான். அவருடைய பெருமைகளும் உயர்வுகளும் மிகமிகப் பெரிது. இதே பார்முலாதான் சிவாஜிக்கும் இதே பார்முலாதான் எம்ஜிஆருக்கும்.,மற்றவர்களுக்கும். இந்த பார்முலாபடி பார்த்தால்கூட சாரு தேறமாட்டாரே. அவருடைய பாலியல் அசிங்கங்கள்தானே அவரது ‘நல்ல’ எழுத்துக்களை விடவும் அதிகமாக உள்ளன.....
சாருநிவேதிதா முன்பிருந்த எழுத்தாளர்களை விடவும் இணைய வாசகர்களிடம் பாப்புலராக இருப்பதற்கு ஒரே காரணம் மற்ற எழுத்தாளர்கள் எழுதத் தயங்கிய பாலியல் பற்றிய விஷயங்களை அப்பட்டமாகவும் வக்கிரமாகவும் தயக்கமின்றி எழுதினார் என்பதால்தான். இதற்காக அவரைத் தமிழ் சமூகம் தலையில் தூக்கிவைத்துக்கொண்டாட முடியாது. எழுத்து என்பது பாலியலைத் தாண்டி இன்னமும் பல்வேறு தளங்களைக் கொண்டது. எழுத்தில் செக்ஸ்எழுதுவது என்பதும்கூட ஒரு பரிணாம வளர்ச்சியாக வருவதுதான்.
பாலியல் எழுத்துக்களை அந்தக்காலத்தில் முதன்முதல் படைப்பிலக்கியத்தில் எழுதத் தொடங்கியவர் குபரா தான்.அவரது படைப்புக்களில் ஊடாக பாலுறவு இருக்கும். சொற்களில் வக்கிரம் இருக்காது. இதேபோல் அடிநாதமாக உளவியல் கண்ணோட்டத்துடன் பாலியலைத் தொட்டவர் தி.ஜானகிராமன். திஜா இந்த விஷயத்தில் பெரிய சிரக்கம்பமே செய்திருப்பார். ஜெயகாந்தன்தான் முதன்முதலாக சில வசவுச்சொற்களை தைரியமாகப் பயன்படுத்தியவர். அடுத்து ஜி.நாகராஜன் இன்னமும் கொஞ்சம் முன்னேறினார். கி.ராஜநாராயணன் கிராமியம் கலந்து பலபடி முன்னேறினார். இன்றைக்கு சாருவுடன் சேர்ந்து நிறையப்பேர் எல்லாக் கட்டுப்பாடுகளையும் தூக்கி எறிந்துவிட்டு எழுதுகிறார்கள். இதுவும் ஒருவகையில் சினிமா மாதிரிதான். எம்கேடி பியூசின்னப்பா காலத்தில் சினிமாக்காதலர்கள் பத்தடி தூரத்தில் நின்று காதலித்தார்கள். சிவாஜி எம்ஜிஆர் காலத்தில் ஓடிப்பிடித்து விளையாடிக் கட்டியணைத்து காதல் புரிந்தார்கள். கமலஹாசன் காலத்தில்தான் பட்டும் படாமலுமாக உதடு உரசிய முத்தம் வந்தது. இப்போது சிம்பு தனுஷ் போன்றவர்களெல்லாம் உதட்டோடு உதடு பொருந்திய முத்தமெல்லாம் மிகவும் சாதாரணம் என்பதுபோல் நடந்துகொள்கிறார்கள். அவ்வளவு இயல்பு ஆகிவிட்டது. இதற்காக புரட்சி செய்தவர்கள் என்று தனுஷையும் சிம்புவையும் ஒரு சமூகம்
தூக்கிவைத்துக்கொண்டு கொண்டாட முடியுமா என்ன?
தன்னுடைய கதைகளில் செக்ஸ் எழுதும் ஒரு எழுத்தாளன் முகநூல் போன்ற ஒரு பொதுத்தளத்தில் ஒரு பெண்ணிடம் மிகமிக வக்கிரமாகவும் ஆபாசமாகவும் நடந்துகொள்வதை தமிழுலகின் எல்லா பிரபலங்களையும் சான்றுகாட்டி நியாயப்படுத்துவதுபோன்ற செய்கைகளை அங்கீகரிக்கலாகுமா என்பதுதான் நம்முன் உள்ள கேள்வி.
இந்த ஆள் தவறாகப்போகிறார் என்று தெரிந்தபின்னாலும் அந்தப்பெண் அவருடன் ஏன் தொடர்ச்சியாகப் பேசவேண்டும்? என்று கேட்கப்படும் கேள்வி நியாயமானதுதான். ஆனால், இது ஒருவகையில் சாருநிவேதிதாவின் அலப்பரையான செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவேண்டும் என்று கருதிய சிலரின் கைங்கரியமாகக்கூட இருக்கலாம். ஒரு சில பதிவர்கள் இதற்கான சரியான சந்தர்ப்பம் கருதி காத்திருந்திருக்கூடும் என்றே படுகிறது.
அதாவது இவரது பிராபல்யம் கருதி தொடர்பில் பேசுவதை பெருமையாகக் கருதிய அந்தப்பெண் இவர் வழிதவறுகிறார் என்று தெரிந்ததும் திடுக்கிட்டுப்போய் தனக்குத் தெரிந்த சில பதிவர்களிடம் முறையிட்டிருக்கலாம். அவர்களும் மொத்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் சரி அந்த ஆள் எதுவரை போகிறார் பார்த்துவிடலாம் என்று அந்தப்பெண்ணை இப்படியெல்லாம் நடந்துகொள் என்று வழிநடத்தியிருக்கலாம். யாரையாவது கடத்திப்போய் வைத்துக்கொண்டு போன் செய்து மிரட்டுகிறவர்களிடம் பாதிக்கப்பட்டவர்களை கடத்தல்காரர்கள் போக்கின்படியே நடக்கச்சொல்லி வழிநடத்தி கடைசியில் கடத்தல்காரர்களைச் சுற்றிவளைத்துப் பிடிக்கிறதே காவல்துறை அதுபோல் தமிழச்சி, ராஜன், வால்பையன் ஆகியோர் அந்தப்பெண்ணை வழிநடத்தி இந்த ஆசாமி முழுக்க மாட்டும்வரையிலும் காத்திருந்து இப்போது கையும் களவுமாய்ப் பிடித்து அம்பலப்படுத்தியிருக்கக்கூடும் என்றே தோன்றுகிறது.
உண்மையில் அப்படி நடந்திருந்தால் தமிழச்சி, ராஜன், வால்பையன் ஆகியோர் பாராட்டுக்குரியவர்களே. மொத்த விவகாரத்தையும் இணையத்தின் முன்வைத்து சந்திசிரிக்கவைத்த வினவு தளமும் பாராட்டிற்குரியதே.
சாருநிவேதிதாவின் இந்த முகநூல் உரையாடலில் ஆபாசம் அசிங்கம் வக்கிரம் என்பதையெல்லாம் தாண்டி திருமதி கனிமொழி போன்றோரின் பெயர்களும் இழுக்கப்பட்டு கேவலப்படுத்தப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தைக் கையிலெடுக்க வேண்டியது திமுக இயக்கம் மற்றும் கனிமொழி குடும்பத்தினரின் பொறுப்பு. ஆனால் விவஸ்தை தெரியாமல் நவீன இலக்கியவாதிகள் என்று தவறாக நம்பிக்கொண்டு இம்மாதிரியான ஆட்களையெல்லாம் ஒரு காலத்தில் ஆதரித்துக்கொண்டிருந்ததற்கு கனிமொழிக்குக் கிடைத்த வெகுமதி இது என்றுதான் பரிதாபப்படவேண்டியிருக்கிறது.
எதற்காக இந்த விஷயத்திற்கு இவ்வளவு பெரிய பதிவு என்று கேட்கலாம். எல்லாவற்றையுமே நாம் கவனம் செலுத்தாமல் தவிர்த்துவிடுவோம் என்று கடந்துபோய்விட முடியாது. சில விஷயங்களைத் தெளிவுபடுத்தியே ஆகவேண்டியிருக்கிறது.
இல்லாவிட்டால் பார்த்தீனியச்செடிகள் மிக வேகமாய் எல்லா இடங்களிலும் பரவிவிடும் ஆபத்து இருக்கிறது.
0 comments:
nanri: thiru.AMUTHAVAN,WRITER.