Friday, 30 July 2010
குஞ்சு மிதித்த கோழிகள்
நள்ளிரவில் கேட்ட பயங்கரமான அலறலால் திடுக்கிட்டு விழித்து வெளியில் வந்தேன். காரின் பின்னால் கத்திக்கொண்டே ஒரு பெரியவர் ஓடிக்கொண்டிருந்தார். வேகமாக படிகளில் இறங்கி என் வண்டியை கிளப்பி பாய்ந்தேன். என்.எஸ்.ஆர்.ரோடிலிருந்து, தடாகம் ரோட்டில் திரும்பிய கார் வேகமெடுத்தது. அருகில் சென்று கார் எண்ணை மொபைல் கேமராவில் பதிவு செய்தேன். பிரச்சினை தெரியாமல் காரை மடக்கவேண்டாம் என்று பெரியவரை வண்டியில் ஏற்றி அருகில் இருந்த டீக்கடையில் நிறுத்தினேன். அவர் தேங்காய் பன்னும், டீயும் சாப்பிட்டு முடித்ததும் விசாரித்ததில், மருமகளின் வற்புறுத்தலால், மகன், பெற்ற தகப்பனை கேரள கிராமத்திலிருந்து 150 கி.மி. தொலைவில் உள்ள கோவையில் விட்டுச் சென்றிருக்கிறான்.அவர் பேசிய தூய மலையாளத்தை டீக்கடை நாயர் மொழிபெயர்த்து சொன்னார். மலையாளம் தவிர வேறு மொழி தெரியாத அவர் திரும்பி வரமாட்டார் என்றெண்ணி செய்திருக்கிறான்.அந்த நள்ளிரவில், உதவி கமிஷ ணரை செல்லில் அழைத்து விவரம் கூறிக்கொண்டிருக்கும்போதே ரோந்து போலீசார் வந்து இறங்கினர்.பெரியவரையும் டீக்கடை நாயரையும் ஆர்.எஸ்.ப்புறம் காவல் நிலையத்தில் விசார்த்தார்கள். வாளையார் செக் போஸ்டில் கார் மடக்கப்பட்டு கொண்டுவரப்பட்டது.போலீஸாரின் முறையான விசாரிப்புக்கு பிறகு மகனும் உடன் வந்த நண்பனும் உண்மையை ஒப்புக்கொண்டனர். பெரியவரின் மருமளையும் வரவழைத்து முறையாக வழக்கு பதிவு செய்து ரிமான்ட் செய்துவிட்டார்கள்.இதை விசாரித்த காவல் துறை உதவி ஆணையர் அடுத்த நாள் காலையில் என்னை பார்க்க வந்திருந்தார். அந்த பெரியவரின் கேசை விசாரித்ததில் இருந்து மனசே சரியில்லை என்றும் நான் அவருக்கு ஒரு உதவி செய்யவேண்டும் என்று கேட்டார். செய்கிறேன் என்று கூறியதும், சென்ற வாரம் அவருடைய தந்தையை முதியோர் இல்லத்தில் சேர்த்ததாகவும், இப்போது அவரை வீட்டுக்கு அழைத்து வர முடிவு செய்துருப்பதாகவும், நீங்கள்தான் அவரிடம் பேசி சமாதானம் செய்ய வேண்டும் என்றார். வண்டி சாவியை கையில் எடுத்தேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment